இலங்கை வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாத்து வந்தமையினாலேயே நாடு இதுவரை நற்பெயருடன் பயணித்துள்ளது.தற்போதைய சூழலில் விகாரைகளில் இருக்கும் மகா சங்கத்தினர் கொழும்புக்கு வருகை தந்து மாநாடுகளை நடத்தி பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் ஆலோசகர் சுமுது மதுரங்க தெரிவித்தார்.
கொழும்பில் சுதந்திர கட்சி தலைமை காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை ஆன்மீகத்தையும் கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாத்து வந்தமையினாலேயே நாடு இதுவரை நற்பெயருடன் பயணித்துள்ளது. தற்போதைய சூழலில் விகாரைகளில் இருக்கும் மகா சங்கத்தினர் கொழும்புக்கு வருகை தந்து மாநாடுகளை நடத்தி பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் அன்றாடம் பல கடுமையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் வேளையில், தேவினுவர பெரஹராவின் காவடி தொடர்பான விவகாரம் நாட்டின் பிரதான பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது. மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு முதன்மைப்படுத்தப்படுகிறது. இன்று தேவினுவர பெரஹரா தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் நாளை கண்டி தலதா பெரஹரா உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாரம்பரிய கலாசார ஊர்வலங்களுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
எனவே, நாட்டின் பாரம்பரிய கலாசார பாரம்பரியங்களை எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. பழம்பெரும் பாரம்பரியங்களை அழித்துவிடாமல், பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாண வேண்டும்.
இதேவேளை, நாட்டில் திறமையான விளையாட்டு வீரர்களுக்குச் சரியான சந்தர்ப்பங்களை வழங்கும் வகையில், வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு தெரிவுமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இறுதியாக, தற்போதைய சூழலில் நெல் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். நெல் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகளுக்குச் நியாயமான உத்தரவாத விலை கிடைக்காததால் அவர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். நெல்லுக்கு உரிய நியாயமான உத்தரவாத விலையை வழங்கி, விவசாயத் தொழிலுக்குத் தகுந்த கௌரவத்தையும் மதிப்பையும் அளிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.