நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் உயிரை மாய்த்துக்கொள்ள உதவிய நபர்
Ad Space
Ad Space
கனேடியர்கள், பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி, அதை உட்கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.அந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட கென்னத் லா (61)என்னும் கனேடியர், இணையதளம் வாயிலாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் ரசாயனம் ஒன்றை விற்பனை செய்துவந்தார். கென்னத் லா, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட்கள் விஷம் அனுப்பியுள்ளார். நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்கள்.அந்த ரசாயனத்தை வாங்கி உட்கொண்டு 127 பேர் வரை தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பலருடைய தற்கொலைக்கு உதவியதாக, 2023ஆம் ஆண்டு, மே மாதம் கைது செய்யப்பட்டார் கென்னத் லா. தன்னிடம் விஷம் வாங்கி, கனடாவில் 14 பிள்ளைகள் உயிரிழந்ததாக கென்னத் லா ஒப்புக்கொண்ட நிலையில், அந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை, ஒன்ராறியோவிலுள்ள நியூமார்க்கட் நகர நீதிமன்றத்தில் நேற்று துவங்கியுள்ளது. இந்த விசாரணை, தீர்ப்பு வழங்குவதற்கு முந்தைய இறுதிகட்ட விசாரணையாகும். அதாவது, ஏற்கனவே கென்னத் லா குற்றவாளி என முடிவாகிவிட்டது. அதைத் தொடர்ந்து, அவரால் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது, அவரிடம் விஷம் வாங்கி உயிரை மாய்த்துக்கொண்ட, உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர்களின் பெற்றோர் குடும்பத்தினர், தாங்கள் எவ்விதம் பாதிக்கப்பட்டோம், தங்கள் பிள்ளை உயிரிழந்ததால் தங்கள் குடும்பத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து நீதிமன்றத்தில் பகிர்ந்துகொள்வார்கள். அதைத் தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.நேற்று ஒரு நாள் மட்டுமே, பாதிக்கப்பட்ட 74 பேர் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பகிர்ந்துகொண்ட நிலையில், இன்றும் அந்த நிகழ்வு தொடர்கிறது. விடயம் என்னவென்றால், கனடாவில் மட்டுமல்ல, பிரித்தானியாவிலும் கென்னத் லாவிடம் விஷம் வாங்கி 112 பேர் உயிரிழந்துள்ளதால், அவர்களுடைய குடும்பத்தினர் சிலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.அழுகையும் கண்ணீருமாக நேற்றைய நீதிமன்ற நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், பல நாட்களுக்கு இந்த வழக்கு விசாரணை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு, நீதிபதி தனது தீர்ப்பை வழங்க உள்ளார். அது எப்போது என்பது தெரியவில்லை.
Ad Space
Ad Space
