வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.எயார் பஸ் கொள்வனவு மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று வெள்ளிக்கிழமை (18) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தவாறு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் நாமல் ராஜபக்‌ஷவுக்கும்,குறித்த நிறுவனத்துக்கும் இடையில் மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாற்றப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நீதிமன்ற விசாரணைகளில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத விடயங்களை தேசிய மக்கள் சக்தியின் சேறு பூசல் ஆதரவாளர்கள் போலியான  கருத்துக்களை சமூகமயப்படுத்துகிறார்கள்.வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்தியுள்ளது.அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம்.ராஜபக்‌ஷர்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மற்றும் சர்வாதிகார செயற்பாட்டை சுட்டிக்காட்டும் தரப்பினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.அரசாங்கம் தனது நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஏதும் நடக்கலாம். அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதிக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.