தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகக் கூறி, தாய்வானைச் சுற்றியுள்ள பகுதிகளில் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் சீனா, நேற்று (டிச. 31) பயிற்சிகளை நிறைவு செய்த நிலையில், சீன ஜனாதிபதி “நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய போர்ப்பயிற்சி நிறைவு மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்றிரவு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளியிட்ட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
ஒரே நாடு, 2 அமைப்புகள் என்ற கொள்கையை நாம் அமுல்படுத்தியே ஆகவேண்டும். ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகியவற்றை நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ஒன்றிணைக்க ஆதரவளிக்கவேண்டும். அவற்றுடன் நீண்ட கால வளம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும் என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும், சீன ஜனாதிபதியின் கருத்துக்கு தாய்வான் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
சுயாட்சி பகுதியாக தன்னை அறிவித்துக்கொண்ட தாய்வான், சீனாவின் நிலைப்பாடு மற்றும் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது.
தாய்வானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வரும் நிலையில், தாய்வானின் வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சுற்றி சீன இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் ரொக்கெட் படையினர் ஒன்றிணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்தப் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு “ஜஸ்டிஸ் மிஷன் 2025” என பெயரிடப்பட்டது.
இப்போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு தாய்வான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே நேற்று இப்பயிற்சிகளை சீனா நிறைவு செய்துள்ளது.