மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய அக்கறை அரசாங்கத்துக்கு உள்ளதா என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்தியதன் பின்னர் தேர்தல் முறைமை குறித்து ஆராயலாம். அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒன்று நான் முன்வைத்த தனி நபர் பிரேரணையை நிறைவேற்றுங்கள், அல்லது நீங்கள் (ஆளும் தரப்பு) ஒரு பிரேரணையை நிறைவேற்றலாம். குறைப்பாட்டை குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போதுவது எந்தளவுக்கு நியாயமானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரான சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை பற்றி ஆராய்ந்து அறிக்கை மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட செயற்குழு செவ்வாய்க்கிழமை (17) முதன்முறையாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போதே செயற்குழுவின் உறுப்பினரான சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்வதற்கு விசேட செயற்குழுவை நியமித்தமைக்கு முதலில் நன்றி கூறுகின்றேன்.மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துக் கூறியிருந்தோம்.
2017 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தல் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது.பழைய தேர்தல் முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த யோசனைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதனைத் தொடந்து 9 ஆவது பாராளுமன்றத்தில் பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நான் தனியார் பிரேரணை ஒன்றை முன்வைத்தேன்.அது பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தனிநபர் பிரேரணையை நிறைவேற்றினால் எதிர்வரும் ஜூன் மாதம் அளவில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும்.
பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். கடந்த ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அவசரமாக செயற்பட்டது.அந்த அவசரம் மாகாணசபைத் தேர்தலுக்கு உள்ளதா என்பதில் எமக்கு சந்தேகம் காணப்படுகிறதுஇ ஏனெனில் இந்த செயற்குழுவுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னரே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஏனைய மாகாணங்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. ஆனால் வடக்கு இகிழக்கு மாகாணங்களுக்கு இத்தேர்தல் தொடர்பில் அதிக அவசியம் உள்ளது து. மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் அங்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் முறைமை நீக்கப்பட வேண்டும்இ பொதுத்தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவ்விரு தேர்தல்களும் நடத்தப்படுகின்றன .மாகாணசபைத் தேர்தலில் உள்ள குறைப்பாட்டை குறிப்பிட்டுக் கொண்டு ஏன் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுள்ளது.இது நியாயமானதா ?
மாகாணசபைத் தேர்தலை நடத்தியதன் பின்னர் தேர்தல் முறைமை குறித்து ஆராயலாம்.மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி கடந்த எட்டு மற்றும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தன.
ஆகவே ஒன்று நான் முன்வைத்த தனியார் பிரேரணையை நிறைவேற்றுங்கள் அல்லது அரசாங்கம் ஒரு பிரேரணையை முன்வைத்து தேர்தலை நடத்துங்கள். வெகுவிரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.
தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையா?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space