தென்கிழக்காசியாவில் தொழில்துறை அளவில் செயல்படும் சர்வதேச மோசடி கும்பல்களுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டாட்சி விசாரணைப் பணியகம் (FBI) கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதென அந்த அமைப்பின் துணை உதவி பணிப்பாளர் ஸ்கொட் ஷெல்பிள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் Asia Pacific Media Hub ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய அவர், சமீபத்தில் தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தென்கிழக்காசியாவில் சீன அமைப்பு சார்ந்த குற்றச்செயல் கும்பல்கள் நடத்தும் மோசடி மையங்கள் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருவதாகவும், அவை தினமும் அமெரிக்கர்களை குறிவைத்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இவை தனிப்பட்ட அல்லது சிறிய குற்றச்செயல்கள் அல்ல. நவீன தொழில்நுட்பம், எல்லை தாண்டிய அமைப்பு மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட பல கூறுகளை பயன்படுத்தி, மிகப்பெரிய லாபம் ஈட்டும் அமைப்புகளாக செயல்படுகின்றன” என அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் மட்டும், எஃப்பிஐயின் Internet Crime Complaint Center (IC3) மூலம் 80,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், மொத்த நிதி இழப்பு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மோசடி மையங்களில் பணிபுரிபவர்களில் பலர் மனித கடத்தலுக்குள்ளானவர்களாக இருப்பதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இவை வெறும் இணைய மோசடிகள் அல்ல; இது அமைப்புசார்ந்த குற்றச்செயல். மனித கடத்தல், பணமோசடி மற்றும் ஊழல் அனைத்தும் இதில் கலந்துள்ளன,” என அவர் தெரிவித்தார்.

கம்போடியா, தாய்லாந்து அல்லது வியட்நாம் போன்ற நாடுகளில் மட்டும் இந்த பிரச்சினை இருப்பதாக கருத முடியாது என்றும், இது முழு பிராந்தியத்தையும் பாதிக்கும் ஒரு சிக்கலாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒரு நாட்டில் அழுத்தம் அதிகரித்தால், இந்த கும்பல்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. எனவே, எல்லை தாண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கையே முக்கியம்,” என அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து பொலிஸ், கம்போடிய தேசிய பொலிஸ் மற்றும் வியட்நாம் பொது பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் எஃப்பிஐ நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கூட்டு விசாரணை அணிகள் மூலம் பல வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கர்களை குறிவைக்கும் “Pig Butchering” என அழைக்கப்படும் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, அறிமுகமற்ற நபர்களின் முதலீட்டு வாய்ப்புகளை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம், உண்மையான நிதி நிறுவனங்களைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதள முகவரிகளை கவனிக்கவும், சந்தேகமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், “அதிக லாபம்” வாக்குறுதி அளிக்கும் திட்டங்களை எச்சரிக்கையுடன் அணுகவும், “உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நல்லதாகத் தோன்றினால், அது மோசடியாக இருக்க வாய்ப்பே அதிகம்” என அவர் எச்சரித்தார்.

குற்றவாளிகள் புவியியல் எல்லைகள் தங்களை பாதுகாக்கும் என நினைக்கக் கூடாது எனவும், அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இது எஃப்பிஐ மட்டும் செய்யக்கூடிய வேலை அல்ல. சர்வதேச ஒத்துழைப்பே வெற்றியின் விசை,” என அவர் நிறைவுரையில் தெரிவித்தார்.