ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர்.
அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை மீண்டும் முகாமிற்கே திருப்பி அனுப்பினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று புதன்கிழமை (18) ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் மிகவும் காட்டமாகப் பதிலளித்தார்:
"தவறு செய்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். நமது வாழ்க்கை முறையையும் ஜனநாயகத்தையும் அழிக்க முற்பட்ட ஒரு கொடூரமான சித்தாந்தத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களாகவே விரும்பி வெளிநாடு சென்றனர். அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யாது."
பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனையின் பேரில், அதிக ஆபத்தானவராகக் கருதப்படும் ஒருவருக்கு மட்டும் 02 ஆண்டுகள் வரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 33 பேருக்கு அத்தகைய சட்டரீதியான தகுதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 34 பேரில் 23 சிறுவர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோரின் முடிவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்புபவர்கள் செல்லுபடியாகும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுகளை (Passports) வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சட்டங்களின்படி பிரஜைகளைத் தடுப்பது கடினம் என்றாலும், அரசாங்கம் அவர்களுக்கு எவ்வித நிதி அல்லது பயண உதவிகளையும் வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
சிரியாவின் முகாம்களில் இன்னும் 2,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் (முக்கியமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள்) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் தங்களது பிரஜைகளைத் திரும்பப் பெற இதே போன்ற தயக்கத்தையே காட்டி வருகின்றன.
சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space