முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்யவுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தம்பையா பிரகாசன் என்ற சந்கேநபர் கைது செய்யப்பட்டடிருந்தார். குறித்த சந்தேகநபரின் விடுதலை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கும் ஏனைய இருவருக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளைப் பாதிக்கக்கூடும் எனச் சட்டமா அதிபர் சுட்டிகாட்டியுள்ளார்.சந்தேகநபர் மீது மொத்தம் 230 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை தொடர்ந்தே சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 4 சரீரப் பிணைகள் மற்றும் 200 000 ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் 2012 ஆண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதியன்று அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.