பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு கடுமையான உத்தியோகபூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 25.01.2026 அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தொன்றின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின் போது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியில் உரையாடியவாறு பேருந்தைச் செலுத்தியமை தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்று அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
அம்முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முடிவில், குறித்த பேருந்துச் சாரதி மேலதிக அறிவித்தல் வரும் வரை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த 23.01.2026 அன்று மதியம் 1.40 மணியளவில், மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றாமல் சென்ற தனியார் பேருந்து தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தினால் அதிகார சபைக்கு எழுத்துமூலமான முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு உத்தியோகபூர்வமான கடும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் தரமும் பயணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும். எனவே, இவ்வாறான விதிமீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தயங்காமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கைப்பேசி பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய சாரதி இடைநிறுத்தம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space