இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் அரசாங்கங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனவே தவிர இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. இலங்கை - இந்திய கூட்டு பொறிமுறையின் கீழ் கச்சத்தீவின் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென இந்திய மீனவ சங்கங்கள் வலியுறுத்தின. கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா நேற்று சனிக்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் பெரும்பாலான இந்திய மீனவர்கள் மற்றும் மீனவ சங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.
தெற்காசிய மீனவர் தோழமை சங்கத்தின் பொதுச்செயலாளர் அருட்தந்தை சேர்சில் கச்சத்தீவு வருடாந்த திருவிழைவை இலங்கை அரசாங்கம் சிறப்பாக நடத்தியதாகவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு சுதந்திரமாக வந்துச் சென்றார்கள்.அந்த சுதந்திரம் தற்போது இல்லை. இலங்கை - இந்திய கூட்டு பாதுகாப்பு கண்காணிப்பில் கச்சத்தீவு பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும்.
கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றார். தெற்காசிய மீனவ தோழமை சங்கத்தின் மாநில பொருளாளர் டேவிட் குமார், இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.
இரு நாட்டு மக்களுக்கும் தொப்புள்கொடி உறவு காணப்படுகின்ற நிலையில், இந்த மீன்பிடி தொழில் சார்ந்த பிரச்சினை மாத்திரமே காணப்படுகிறது. இந்தியா இலங்கையின் சிறந்த நட்பு நாடாக உள்ளது. ஆகவே கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை இலங்கை மனிதாபிமானத்துடன் விடுவிக்க வேண்டும். ஏனேனில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
அவர்களை சிறையில் இடத்தில் அவர்களின் முழு குடும்பமே பாதிக்கப்படும் .ஆகவே இரு நாட்டு அரசாங்கமும் இந்த பிரச்சினைக்கு கூட்டுப் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தினார். நாட்டு படகு மீனவ சங்கம் இராமநாதபுர மாவட்டம் பாம்பன் கிளையின் தலைவர் எஸ்.பி.ராயப்பன், இலங்கை - இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக முரன்படுவது முறையற்றது. இரு நாட்டு மீனவர்களும் ஏழ்மை நிலையில் தான் உள்ளார்கள்.
ஆகவே இந்த பிரச்சினைக்கு இரண்டு நாடுகளின் அரசாங்கமும் சுமுகமாக தீர்வுகாண வேண்டும். கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் எதிர்வரும் மே மாதமளவில் தமிழகம் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.ஆகவே மீன்பிடி சங்கங்களுடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
கூட்டுப்பொறிமுறையின் கீழ் கச்சதீவின் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space