பிரபல உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனம், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது நிறுவனத் தயாரிப்பான குழந்தைகளுக்கான பால் பவுடரை திரும்பப் பெறுவதாக அறிவித்த விடயம் நினைவிருக்கலாம்.
பால் பவுடரில் நச்சுப்பொருள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்புகளான SMA, BBA, மற்றும் NAN உட்பட பல பால் பாவுடர் தயாரிப்புகள், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் இத்தாலி உட்பட 60 நாடுகளில் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதாவது, செயற்கையாக தயாரிக்கப்படும் பால் பவுடரில் கலக்கப்படும் ARA என்னும் உட்பொருளில் செருலைட் என்னும் நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அந்த தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.செயற்கையாக தயாரிக்கப்படும் பால் பவுடர்கள், தாய்ப்பாலை ஒத்திருக்கவேண்டும் என்பதற்காக, arachidonic acid (ARA) oil என்னும் ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலம் (essential fatty acid) பால் பவுடரில் கலக்கப்படுகிறது.

பால் பவுடரில் கலக்கப்படும் இந்த ARA எண்ணெயில், செருலைட் (cereulide) என்னும் நச்சுப்பொருள் இருப்பது, வழக்கமான சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செருலைட் என்பது, பேசில்லஸ் சிரியஸ் (Bacillus cereus) என்னும் பாக்டீரியாவால் உருவாக்கப்படும் ஒரு நச்சுப்பொருளாகும்.


முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நச்சுப்பொருளை சூடாக்கினாலும் அது அழியாது (heat-stable toxin). அதாவது, கொதிக்கும் நீருடன் கலந்தாலும் இந்த நச்சு அழியாது. பால் பவுடர் தயாரிக்கும்போது, அதை பதப்படுத்தினாலும் (pasteurisation) அந்த நச்சு அழியாது என்பது ஒரு முக்கியப் பிரச்சினை.

இந்த செருலைட் கலந்த பாலை அருந்தினால், குழந்தைகளுக்கு தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுப்போக்கு, கடும் சோர்வு முதலான பல பிரச்சினைகள் ஏற்படும்.
பிரான்ஸ் நடவடிக்கை
இந்நிலையில், பால் பவுடர் தொடர்பில் பிரான்ஸ் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

அதாவது, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்க, பால் பவுடரில் செருலைட்டின் அனுமதிக்கப்பட்ட அளவை மேலும் குறைக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

நிதர்சனம் என்னவென்றால், குழந்தைக்கான பால் பவுடரில் இந்த செருலைட் இருக்கவே கூடாது. அது ஒரு நச்சுப்பொருள்.

ஆனால், பால் பவுடர்கள், தாய்ப்பாலை ஒத்திருக்கவேண்டும் என்பதற்காக, அதில் arachidonic acid (ARA) oil என்னும் ஒரு பொருளைக் கலக்கிறார்கள்.

தற்போது, சீன நிறுவனம் ஒன்று தயாரித்த அந்த ARA எண்ணெய் மூலமாகத்தான் இந்த செருலைட் பால் பவுடரில் கலந்துள்ளது.

ஆக, அதை முற்றிலும் நீக்க இயலாமல், அதன் அளவையாவது குறைக்கலாம் என்னும் ரீதியில்தான் பிரான்ஸ் தற்போது நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது.

தற்போது, பால் பவுடரில் செருலைட் , கிலோகிராமுக்கு 0.03 மைக்ரோகிராம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என தரநிலைக் கட்டுப்பாடுகள் கூறும் நிலையில், அதை 0.014 மைக்ரோகிராமாக குறைக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

அதாவது, பாலில் கிலோகிராமுக்கு 0.014 மைக்ரோகிராம் செருலைட் இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என பிரான்ஸ் வேளாண்மை அமைச்சகம் முடிவு செய்ய உள்ளது.