காம்பியா கடற்கரைக்கு அருகே, குடியேற்றப் பாதையில் பயணித்த 200-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து வியாழக்கிழமை (01) நள்ளிரவு காம்பியாவின் வடக்கு கரையோரப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே இடம்பெற்றதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 96 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பலர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவசர உதவிக்கான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,  காம்பிய கடற்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடங்கியது. இதில் பல கடற்படை கப்பல்கள் மற்றும் உதவிக்கு வந்த ஒரு மீன்பிடி படகும் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன.

பின்னர், விபத்துக்குள்ளான படகு “மணல் மேட்டில் சிக்கிய நிலையில்” கண்டுபிடிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் சிலர் காம்பிய குடிமக்கள் அல்ல என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அடையாளங்களை உறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.