உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் கனேடிய இளம்பெண்ணொருவர்.உயிருடன் இருக்கும்போதே இரண்டு உடல் உறுப்புகளை தானம் செய்த முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர்.ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடையும்போது அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். அல்லது, தன் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சிறுநீரகம் செயலிழந்தால் ஒரு சிறுநீரகத்தை தானம் கொடுக்கும் நபர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால், உயிருடன் இருக்கும்போதே, இரண்டு உறுப்புகளை தானம் செய்துள்ளார் கனேடிய பெண்ணொருவர், அதுவும், தன் உறவினர்களுக்கு அல்ல, முன் பின் தெரியாத நபர்களுக்கு!அந்தப் பெண்ணின் பெயர், மேகன் ரொஸேமா (Meghan Rozema). ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த மேகன், சிறு பிள்ளையாக இருக்கும்போது, தன் பெற்றோர் இரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதை நன்கறிந்தவர். இரத்த தானம் செய்யும் வயதை அடைந்தபின், தன் பெற்றோரைப்போலவே, தானும் இரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார் மேகன்.அப்போது, சிறு குழந்தை ஒன்றிற்கு கல்லீரல் தானம் தேவைப்படுவது குறித்து அறிந்துகொண்ட மேகன், ஏற்கனவே தன் குடும்பத்துடன் உடல் உறுப்பு தானம் குறித்து பேசி, தன் பெற்றோரின் அனுமதியையும் பெற்றிருந்ததால், அந்தக் குழந்தைக்கு தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்துள்ளார்.இந்நிலையில், தங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்துகொண்டுள்ளார் மேகன். அவருக்கு சிறுநீரக தானம் தேவைப்பட்டுள்ளது.அதைத் தெரிந்துகொண்ட மேகன், தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்ய முன்வந்துள்ளார். ஆனால், அவர் சமீபத்தில்தான் கல்லீரல் தானம் செய்திருந்ததால், மீண்டும் உடல் உறுப்பொன்றை தானம் செய்ய இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.சோகம், என்னவென்றால், அதற்குள் அந்த குடும்ப நண்பரின் தாய் மரணமடைந்துவிட்டார்!பின்னர், முன் பின் தெரியாத ஒருவருக்கு சிறுநீரகம் ஒன்று தேவைப்படவே, அவருக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்துள்ளார் மேகன்.என் குடும்ப நண்பரின் தாயின் நினைவாக, அவரை கௌரவிக்கும் வகையில் நான் அந்த நபருக்கு என சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்தேன் என்கிறார் மேகன்.ஆல்பர்ட்டா மாகாணத்தைப் பொருத்தவரை, உயிருடன் இருக்கும்போதே இரண்டு உறுப்புகளை தானம் செய்த முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் மேகன்.அத்துடன், மொத்த கனடாவிலும் உயிருடன் இருக்கும்போதே இப்படி இரண்டு உறுப்புகளை தானம் செய்தவர்கள் வெகு சிலர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.