இஸ்ரேல் வேலைவாய்ப்பு மாபியாவால் கனவு கலைந்தது
Ad Space
Ad Space
Ad Space
அரசாங்கத்தின் பலவீனமான மற்றும் மந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கை காரணமாக, இஸ்ரேல் உட்கட்டமைப்புத் துறையில் வேலைவாய்ப்பு பெறக் காத்திருந்த ஆயிரக்கணக்கான இலங்கை இளைஞர்களின் கனவு கேள்விக் குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பத்தரமுல்ல, பொல்தூவ சந்தியில் இன்று செவ்வாய்கிழமை (08) அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் உட்கட்டமைப்புத் துறை லாட்டரி விண்ணப்பதாரர்களின் ஒன்றியத்தினரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸ் சான்றிதழ்கள் மற்றும் உடற்தகுதிப் பரிசோதனைகளை முடித்துத் தயாராக இருந்த போதிலும், உட்கட்டமைப்புத் துறையில் எவ்வித வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.தற்போதைய நிலைவரப்படி, சுமார் 560 பேர் வேலைவாய்ப்பை நேரடியாக எதிர்நோக்கியுள்ளதுடன், மேலும் 1,200 பேர் உட்கட்டமைப்பு லாட்டரி முறைமையின் கீழ் காத்திருக்கின்றனர்.அரசாங்கத்தின் மூலமான வேலைத்திட்டம் மிகவும் மெதுவாகச் செயல்படும் அதேவேளை, தனியார் துறையினர் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திப் பெருந்தொகையான பணத்தைச் சுரண்டுகின்றனர்.அரசாங்கத்தின் ஊடாக இஸ்ரேல் வேலைவாய்ப்பிற்குச் செல்வதற்குச் சுமார் 10 இலட்சம் ரூபா மாத்திரமே செலவாகும் நிலையில், தனியார் முகவர்கள் மூலம் செல்வதானால் 35 இலட்சம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது.வாக்குறுதியளிக்கப்பட்ட முறைமை மாற்றத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதுடன், பொய்ப் பிரசார அரசியலையே முன்னெடுத்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராகத் நாம் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பதுடன், பாதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பிரச்சினைகளை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் நேரடியாக முன்வைக்கவுள்ளேன்.முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இத்தகைய மோசடி மற்றும் சுரண்டல் முறைமைகளை உடனடியாக ஒழித்து, 10 இலட்சம் ரூபா செலவில் இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.இந்த பலவீனங்களை அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.
Ad Space
Ad Space
Ad Space
