இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், நீதி மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை நோக்கிய அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் வலுவான அதிகாரங்களைக்கொண்ட பிரத்யேக விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் உலகநாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான விவாதத்தின்போது கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் இலங்கையின் சமகால நிலைவரம் குறித்து உரையாற்றிய ஹரினி சிவலிங்கம் மேலும் கூறியதாவது:
கனடாவின் சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் அமைப்பு என்பன இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் நிலவும் தாமதம் குறித்து பல ஆண்டுகளாக பேரவையில் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. இலங்கை தொடர்பில் பேரவையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்விவகாரத்தின் போக்கு மிகத்தெளிவாகத் தென்படுகிறது. அதாவது ஜெனிவாவில் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டில் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் போக்கு தொடர்கிறது.
தற்போதைய அரசாங்கம் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஆக்கபூர்வமான பொறுப்புக்கூறல் ஆகிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஆட்சிபீடமேறியது. ஆனால் அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலம் கடந்தும், அந்த இலக்குகளை நோக்கிய அளவிடக்கூடிய எந்தவொரு முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. இது இனியும் கால அவகாசத்தைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்த ஒரு புதிய நிர்வாகம் அல்ல. கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும், அவற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக காலவரையறையின்றிக் காத்திருக்க முடியாது.
இவ்வாறானதொரு பின்னணியில் வெறுமனே அறிக்கைகளை வெளியிடும் தீர்மானங்களைத் தாண்டி, சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் பல தசாப்தங்களாக வேரூன்றியுள்ள தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் போக்கு என்பவற்றை முடிவுக்குக்கொண்டுவந்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குரிய வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தருணம் இதுவாகும். அன்றேல் இலங்கையில் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவது சாத்தியமற்ற விடயமாகும்.
அதற்கமைய இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், நீதி மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை நோக்கிய அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் வலுவான அதிகாரங்களைக்கொண்ட பிரத்யேக விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிக்குமாறு பேரவையிடம் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் தமிழ் மற்றும் சிறுபான்மையின சமூகங்களின் அபிலாஷைகள் மற்றும் உரிமைகள் முறையான விதத்தில் கையாளப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செலுத்தவேண்டிய நிதி நிலுவைகளை உடனடியாகச் செலுத்துமாறு நாம் சகல உறுப்பு நாடுகளிடமும் வலியுறுத்துகிறோம். இந்தப் பேரவையினதும், ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய கிளைக் கட்டமைப்புக்களினதும் முக்கிய பணிகள் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்வதற்கு இது அவசியமாகும் என வலியுறுத்தினார்.
இலங்கை மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க விசேட அறிக்கையாளரை நியமியுங்கள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space