இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன குறித்து கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை (18) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைக்குரிய பொதுவான விடயங்கள் தொடர்பில் ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயலாற்றும் நோக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தொடர் சந்திப்புக்களை நடாத்திவருகின்றன.

அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான அடுத்த சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை (18) காலை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது இரு கட்சிகளினதும் சார்பில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து மூவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியிலிருந்து அறுவரும் என மொத்தமாக 9 பேரடங்கிய இணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதன்படி அக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், கடந்த திங்கட்கிழமை 6 தமிழ்க் கட்சிகள் கூடி கலந்துரையாடிய விடயங்கள் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் இச்சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளது.

மேலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த 6 நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில் சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை எட்டுதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை முதற்கட்டமாக ஏற்றுச் செயற்படுவதற்குத் தயார் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி அறிவித்திருக்கும் பின்னணியில், அதுபற்றியும் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.