தற்போது இலங்கையில் வாழும் பௌத்த துறவிகளுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான காலப்பகுதி நிலவி வருகின்றது. வெளிநாடுகளில் வாழும் தேரர்களுக்கு நல்லதொரு கௌரவம் கிடைக்கும் அதேவேளை, உள்நாட்டில் உள்ள தேரர்கள் எங்கு சென்றாலும் தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளியிடம் பேசுவதைப் போன்ற தொனியிலேயே சில மக்கள் தேரர்களை விளித்து உரையாடுகின்றனர். இந்த நிலைமை மிகவும் மனவருத்தத்ததுக்குரியதாகும் என பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.
பானகலவில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது உள்நாட்டில் வாழும் தேரர்களை விடவும், வெளிநாடுகளில் வாழும் தேரர்களுக்கு சிறந்ததொரு மதிப்பு காணப்படுகின்றது. இலங்கையில் உள்ள தேரர்கள் எங்கு சென்றாலும் தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் சாதாரண தொழிலாளியிடம் பேசுவதைப் போன்ற தொனியிலேயே சில மக்கள் உரையாடுகின்றனர்.
நான் 5 நாட்களுக்கு முன்னர் மொங்கோலியா சென்றிருந்த போது, அங்குள்ள மக்களும் இந்திய அரசாங்கமும் பௌத்த மதத்துக்கு காட்டிய மதிப்பானது அளப்பரியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட கோரிக்கைக்கு இணங்க, தம்பதிவ சாஞ்சி விகாரையிலுள்ள அளப்பரிய ஆற்றல்மிக்க முதன்மைச் சீடர்களின் புனித தாதுக்களை மொங்கோலியாவுக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்துவதற்காக சிறப்பு வானூர்தி வசதி ஒன்று இந்திய அரசினால் வழங்கப்பட்டு, விசேட அரச மரியாதைகளும் செலுத்தப்பட்டன.
ஆனால், இன்று இலங்கையில் வாழும் இளைஞர்களிடம் அந்த பக்தி பூர்வமான சிரத்தை அறவே இல்லை. தேரர் ஒருவர் வீதியில் சென்றாலும் அவர்கள் மதித்துப் பேச முற்படுவதில்லை. எப்படியாவது ஒரு தேரரின் குறையைத் தேடிப்பிடித்து, அவதூறுகளைப் பரப்பும் ஒரு மோசமான யுகமே நாட்டில் உருவாகியுள்ளது.
இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த 2, 3 நாட்களாக நான் ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். ஜனாதிபதியின் செயலாளருக்கு பல செய்திகளை அனுப்பிய போதிலும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
ஜனாதிபதி என்னை நன்கு அறிவார். நாட்டில் நடக்கும் இந்த அவலங்கள் குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதியை சந்திப்பதே மிகச்சிறந்த சந்தர்ப்பமாகும். ஜனாதிபதியின் செயலாளர்கள் கூட அவருக்கு உண்மையான நிலவரங்களைச் சொல்வார்களா என்பது சந்தேகமே.
மேலும், நான் நேற்று எமது விகாரைக்கான பேருந்தின் இருக்கைகளில் பாதுகாப்பு பட்டிகளைப் பொருத்துவதற்காக கொண்டு சென்ற போது, பாதுகாப்பு பட்டி அணியும் சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாகக் கூறி பொலிஸார் எமது வாகனத்தை மறித்தார்கள். அவ்வாறானதொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு 1 மாதத்துக்கு முன்பதாகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அதற்கான பணத்தைத் திரட்டுவதற்கும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதுமே மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது.
நான் ஒரு வெளிநாட்டிற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச முற்பட்டால் உடனடியாகவே பதில் கிடைக்கின்றது. விமான நிலையம் சென்று கொண்டிருந்த போதே, இந்தியாவின் வெளிநாட்டு நாணய விவகாரங்களுக்கான அமைச்சருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இலங்கையிலோ நாளுக்கு நாள் ஒழுக்க விழுமியங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே, எமது மக்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், விகாரையின் ஊடாக முன்னெடுக்கப்படும் சமயப் பணிகளைத் தொய்வின்றி கொண்டு செல்வதற்கும் உங்களால் இயன்றளவு விகாரைக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்குங்கள். எமது தேரர்களின் சாசனப் பணிகளுக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.