உலகம் முழுதும் ஒரு போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. ஒரு வல்லரசு நாடு தனது அதிகாரத் தைப் பயன்படுத்தி அக்கிரமங்களை இழைத்து வருகின்றது. சர்வதேச ரீதியில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சர்வதேச யுத்தங்களினால் இலங்கை போன்ற சிறிய நாடுகளே பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்கின்றன சர்வாதிகார போக்கு இலங்கையில் ஒழிக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வித்தக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய அரசியல் சாசன மாற்றங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளை சந்தித்துள்ளன. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாம் எதிர்வரும் ஆண்டுகளில் பில்லியன் கணக்கிலான கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்ற சூழலில் எமது நாட்டின் எதிர்காலம் சவாலுக்குரியதாகவே அமையப்போகிறது.
1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையானது நீக்கப்பட வேண்டும். தனிநபர் ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் இப்பதவியை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கையில் இருக்கும் போது அத்தகைய மாற்றங்களைச் செய்வார்கள் என்பது சந்தேகமே. தமக்குக் கிடைத்துள்ள எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தில் எதேச்சதிகார மாற்றங்களைச் செய்ய முயற்சிகள் நடப்பதாகத் தெரிகின்றது.
நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அரசியல் சாசன விவகாரங்களில் தற்போதைய ஆட்சியாளர்களின் போக்கு அவதானிக்கப்பட வேண்டியது.
அரசியல் சாசனத்தில் கை வைக்கப்படும் போதும் ஜனநாயக விழுமியங்கள் மீறப்படும் போதும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் சட்ட மாணவர்களும் சட்டத்தரணிகளும் முன்னிலையில் இருக்க வேண்டும். அண்மையில் ஒரு சட்டத்தரணி கொல்லப்பட்ட போது காட்டிய அதே வேகத்தையும் ஒற்றுமையையும் அரசியல் சாசனப் பாதுகாப்பிலும் நாம் காட்ட வேண்டும். மக்களுக்கு இவ்வாறான விடயங்களில் தெளிவூட்டுவது சட்ட சமூகத்தின் தார்மீகப் பொறுப்பாகும் என்றார்.
இலங்கையில் சர்வாதிகார போக்கு ஒழிக்கப்பட வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space