பாகிஸ்தான் விமானப்படை வெள்ளிக்கிழமை (27) அதிகாலை முதல் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரம் கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தலிபான் அரசு பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகத்தில், "எங்கள் பொறுமை எல்லையை மீறிவிட்டது. தற்போது எங்களுக்கும் உங்களுக்கும் இடையே நேரடிப் போர் ஆரம்பமாகிவிட்டது" என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இந்த இராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கசாப் லில் ஹக்' என்று பெயரிட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை இரவு, தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளன. அதில் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகவும், பல இராணுவப் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உரிமை கோரியுள்ளது.
தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு தெரிவித்தது. இதற்குப் பதிலடியாகவே தலிபான்கள் வியாழக்கிழமை தாக்குதலை ஆரம்பித்தனர்.
அக்டோபர் மாதம் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான நில எல்லைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், காபூல் மற்றும் கந்தகாரில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். எனினும், எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கனரக ஆயுதங்களுடன் கடும் போர் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space