அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் அமெரிக்கத்தூதுவர் உறுதி
Ad Space
Ad Space
எதிர்வருங்காலங்களில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு பணியாற்றுவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் அமெரிக்கத்தூதுவர் எரிக் மேயர் உறுதியளித்துள்ளார்.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அண்மையில் கடமைகளைப் பொற்றுப்பேற்றுக்கொண்ட எரிக் மேயர் கண்டியில் மல்வத்துபீட மகாநாயக்க தேரரான திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றார்.அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இலங்கை மீதான வரிவிதிப்பைக் குறைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாகவும், இலங்கைக்கு அமெரிக்கா மேலும் வரி நிவாரணங்களை வழங்கும் என நம்புவதாகவும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர் அமெரிக்கத்தூதுவரிடம் தெரிவித்தார்.இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளில் பிரதானமானது தைக்கப்பட்ட ஆடைகளேயாகும். அதற்கமைய இவ்வருடத்தில் முதலாம் அரையாண்டில் இலங்கையிலிருந்து சுமார் 1.44 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்தப் பொருள் ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதமாகும்.இவ்வாறானதொரு பின்னணியிலேயே மேற்கண்டவாறு கருத்துரைத்த மல்வத்துபீட மகாநாயக்க தேரர், தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அமெரிக்கத்தூதுவருக்குப் பரிசளித்து, 'ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதற்கான வழிகாட்டலை இந்த நூல் வழங்குகிறது' என்று விளக்கமளித்தார்.அதனைத்தொடர்ந்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை தூதுவர் எரிக் மேயர் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால நல்லுறவு குறித்துப் பேசிய மகாநாயக்க தேரர், எரிக் மேயரின் பதவிக்காலத்தில் இந்த உறவு மேலும் வலுவடையும் என நம்புவதாகத் தெரிவித்தார்.அதற்குப் பதிலளித்த தூதுவர் எரிக் மேயர், சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் முதன்முதலில் கண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு சுற்றுலாப்பயணியாகவே வருகைதந்ததாகவும், இனிவருங்காலங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு பணியாற்றுவதாகவும் உறுதியளித்தார்.
Ad Space
Ad Space