அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாகத் தொடர்ந்து வருவதாகவும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் முறையாக நடைபெறாமையே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போது நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தகைமைகளின் அடிப்படையில் சரியான நடைமுறைகளைப் பின்பற்றி ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அரச அச்சகம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் புதன்கிழமை (4) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இலங்கை அச்சக சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய, தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்த திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தற்போது அரசு அச்சகத் திணைக்களத்தில் இல்லாமையினால், திணைக்களத்தின் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சரவை அனுமதியுடன் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தில் உள்ள தகுதியும் அனுபவமும் மிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, இரகசிய மற்றும் பாதுகாப்பு அச்சுப் பணிகள் உள்ளிட்ட இணையவழியில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு பணிகளும் குறைக்கப்படவில்லை. இப்பணிகளின் தரம், இரகசியத்தன்மை மற்றும் நடைமுறைகளைப் பேணுவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
அத்துடன், முழுநேர அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாக நீடித்த ஒன்றாகும். அதற்கான தெளிவான காரணங்களை நாம் அறிவோம்.
அரச சேவையில் முறையான ஆட்சேர்ப்புகள் இடம்பெறாமையே பிரதான காரணமாகும். இது அரசு அச்சகத்திற்கு மாத்திரமின்றி, பல அரச நிறுவனங்களிலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம் எனப் பிரதமர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 16 முதல் 20 வரை இந்தியாவில் நடைபெற்ற ‘2026 செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு’குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார்,
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ‘தெற்கு பூகோள’ பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதலாவது உச்சிமாநாடு இதுவாகும். மக்கள், உலக சமூகம் மற்றும் தரம் ஆகிய துறைகள் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்துக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.
மனித மூலதனம், சமூக வலுவூட்டலுக்கான உள்ளடக்கம், பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அறிவியல், மீளெழும் திறன், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன், செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகிய துறைகள் குறித்து அங்கு ஆராயப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைந்ததுடன், பொறுப்புமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அரச தலைவர் மட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு அமைந்திருந்ததால், இலங்கையின் நிலைப்பாட்டையும் இத்துறை மீதான ஆர்வத்தையும் சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரச சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்புகள் முன்னெடுப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space