அமைப்புகளை முடக்க நிதி நடவடிக்கைகள் பணிக்குழுவின் தரநியமங்களைப் பயன்படுத்தக் கூடாது!
Ad Space
Ad Space
Ad Space
இலாப நோக்கற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிதி நடவடிக்கைகள் பணிக்குழுவின் தரநியமங்களை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தாமல், அரசாங்கம் அத்தரநியமங்களுக்கு முறையாகக் கட்டுப்படுவதை நிதி நடவடிக்கைகள் பணிக்குழு உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சிவில் சமூக நிதி நடவடிக்கைப் பணிக்குழு வலையமைப்பு அதன் நிழல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.நிதி நடவடிக்கைப் பணிக்குழு என்பது நிதிமோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கான நிதியுதவிகளைத் தடுப்பதை இலக்காகக்கொண்ட உலகளாவிய கண்காணிப்பு அமைப்பாகும். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கான சர்வதேச தரநியமங்கள் இவ்வமைப்பினால் வகுக்கப்படும். ஒரு நாடு நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் தரநியமங்களைப் பின்பற்றத் தவறினால், அந்நாடு சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்படாத நாடாகக் கருதப்பட்டு, சாம்பல் பட்டியல் அல்லது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படக்கூடும். இதனூடாக அந்நாட்டின் பொருளாதாரம் பலவீனமானதாகவும், முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பாதுகாப்பற்றதாகவும் மாற்றமடையும்.இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கும், சிவில் சமூக இடைவெளியை சுருக்குவதற்கும் நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் தரநியமங்கள் அரசாங்கத்தினால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக செயற்பாட்டளர்கள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய இலங்கை சிவில் சமூக நிதி நடவடிக்கைப் பணிக்குழு வலையமைப்பு தொடர்ச்சியாகக் கரிசனை வெளியிட்டு வந்தது.இந்நிலையில் இவ்வாண்டு நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் இலங்கை தொடர்பான மதிப்பீடு நடைபெறவுள்ள நிலையில், இதன்போது பரிசீலிக்கப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கி இலங்கை சிவில் சமூக நிதி நடவடிக்கைப் பணிக்குழு வலையமைப்பினால் தயாரிக்கப்பட்டு, நிதி நடவடிக்கைப் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிழல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு வியாழக்கிழமை (17) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரது பங்கேற்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வில் வெளியிட்டுவைக்கப்பட்ட நிழல் அறிக்கையில், 'இலங்கையில் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கும், சிவில் சமூக இடைவெளியைச் சுருக்குவதற்கும் நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் தரநியமங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய சட்டங்கள், நிர்வாக உத்தரவுகள் மற்றும் ஏனைய பல நடைமுறைகள் ஊடாக இந்த ஒடுக்குமுறை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆண்டு நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் இலங்கை தொடர்பான பரஸ்பர மதிப்பீடு நடைபெறவுள்ளமையைக் காரணங்காட்டி, நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்வது கட்டாயம் எனக் கூறி அரசாங்கம் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்றது. இவற்றில் சமீபத்திய நடவடிக்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்ட வரைவாகும். இச்சட்டத்தில் நீதிமன்ற மேற்பார்வையின்றி பொலிஸாருக்கும் ஏனைய நிர்வாகக் கட்டமைப்புக்களுக்கும் பரந்துபட்ட மற்றும் எதேச்சதிகாரப்போக்கிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி சிவில் சமூக அமைப்புக்களை நிர்வகிப்பதற்கென அதிகாரம் குவிக்கப்பட்ட ஏகாதிபத்தியக் கட்டமைப்பொன்றின் கீழ் பரந்தளவிலான அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த நிர்வாக அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்பதையும் இந்த வரைவு கட்டாயமாக்கின்றது' எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதற்கமைய நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றிய நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் தவிசாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், இலங்கையில் சிவில் சமூக அமைப்புக்கள் வெளிநாடுகளிடம் பணம் பெற்று, தத்தமது சுயநலன்களைக் கருத்திற்கொண்டு செயற்படும் கட்டமைப்புக்களாக அரசாங்கங்களினால் விமர்சிக்கப்பட்டாலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் சிவில் இடைவெளியைப் பேணிப் பாதுகாப்பதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் இயங்குகை இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டார்.அதேவேளை கடந்த காலங்களில் பதிவான சில சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிட்டு, அவற்றில் நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் தரநியமங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்று விளக்கமளித்த அவர், யார் குற்றவாளி என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்தின் வசமே இருக்கின்றதே தவிர பொலிஸார் வசமில்லை என்றார்.இவ்வாறானதொரு பின்னணியில் சம்பந்தப்பட்ட தேசிய சட்டங்கள் மற்றும் அரச கொள்கை ஆவணங்கள் தொடர்பான மீளாய்வு, வங்கிச் சேவைகளுக்கான அணுகல் பற்றிய ஆய்வு மற்றும் பண்புசார் கலந்தாலோசனைகள் உள்ளிட்ட ஆய்வு முறைமைகள் ஊடாக அரசாங்கத்தின் நிதி மோசடித் தடுப்பு மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கான நிதியுதவி ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன சிவில் சமூகத்தின் சுயாதீன செயற்பாடுகள் மற்றும் எவ்வாறான பாதக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது பற்றிய விரிவான விபரங்கள் நிழல் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.இதுபற்றி கருத்துரைத்த அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுஷானி அழகராஜா, கடந்த காலங்களில் இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த சந்தர்ப்பங்களில், அவற்றுக்கான தீர்வினை நோக்கிய நகர்வுகளை மேற்கொண்ட முதன்மைப் பங்காளராக சிவில் சமூக அமைப்புக்களே திகழ்ந்ததாகவும், இருப்பினும் தற்போது நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் தரநியமங்கள் அவற்றுக்கு எதிராக ஆயுதமாக்கப்படுவதாகவும் கரிசனை வெளியிட்டார்.அதேவேளை நிதிமோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கான நிதியளிப்பு தடுப்பு எனக் கூறி அரசாங்கங்களினால் ஆக்கபூர்வமான கலந்தாலோசனையின்றிக் கொண்டுவரப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் உத்தேச சட்டமூலம் என்ற தொடர்பில் தீவிர கவலையை வெளிப்படுத்திய பொய்ப் பிரசாரங்கள் மற்றும் குடிமைப் பிரதிபலிப்பு வெளி தொடர்பான ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ, தற்போது சிவில் சமூக அமைப்புக்களும் எல்லாவற்றுக்கும் எதிராகக் குரலெழுப்புவதை விடவும், பிரதானமாகக் கவனம் பெற்ற ஒருசில விடயங்கள் தொடர்பிலேயே அவதானம் செலுத்துவதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி இலங்கையில் திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்கள் பரப்பப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் அதற்கான பெரும் விலையை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களே செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை சிவில் சமூக நிதி நடவடிக்கை பணிக்குழு வலையமைப்பினால் நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிழல் அறிக்கையில், சிவில் சமூக அமைப்புக்கள் சுதந்திரமாக இயங்குவதையும், அமைப்புக்களை நிறுவுவதற்கான உரிமையை அனுபவிப்பதையும் அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்ட வரைவை மீளப்பெறல், பதிவுத் தேவைப்பாடுகள் குறித்த குழப்பத்தை உருவாக்கி அரச சார்பற்ற அமைப்புக்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதைத் தடுக்கும் 01 / 2025ஆம் இலக்க சுற்றறிக்கையை இரத்து செய்தல், அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான மேற்பார்வையிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் ஈடுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரல் என்பவற்றுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதேவேளை இலாப நோக்கற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிதி நடவடிக்கைகள் பணிக்குழுவின் தரநியமங்களை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தாமல், அரசாங்கம் அந்தத் தர நியமங்களுக்கு முறையாகக் கட்டுப்படுவதை நிதி நடவடிக்கைகள் பணிக்குழு உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space
Ad Space