ஈரான் போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதற்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்பலை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறியது.
இந்தியாவில் கூட்டுப் பயிற்சியை முடித்து விட்டு ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க்கப்பலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மார்க்-48 என்ற சக்திவாய்ந்த டார்பிடோ குண்டு மூலம் நேற்று முன்தினம் தகர்த்தது. இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர். 32 வீரர்களை இலங்கை கடற்படை மீட்டது. மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஈரான் கடல் பகுதியில் இருந்து 2,000 மைல்களுக்கு அப்பால் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய டேனா போர்க்கப்பல் மீது எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாமல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்காக அமெரிக்கா மிகுந்த வருத்தம் அடையும்” என்றார்.
இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பல் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில், வடக்கு பெர்சியன் வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குல் நடத்தியதாகவும், இதில் அந்தக் கப்பல் தீப்பிடித்து எரிவதாகவும் ஈரான் கூறியுள்ளது. இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது. இலங்கையில் 2-வது கப்பல் ஈரான் கடற்படையின் டேனா போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததால், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மற்றொரு ஈரான் கடற்படை கப்பல் இலங்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தக் கப்பல் மீதும் அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த கப்பல் இலங்கை நோக்கி செல்கிறது. இதில் ஈரான் கடற்படை வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை கடற்பகுதிக்குள் நுழைய அனுமதி கேட்டுள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கியதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space